Monday, October 7, 2013

ஒரு சிறு பயணக் குறிப்பு

அன்று நானும் என் நண்பனும் தேனி மாவட்டத்தில் இருக்கும் போடிக்கு சென்றிருந்தோம். ஊரின் முழுப்பெயர் போடிநாயக்கனூர். இயக்குனர் பாலா படங்களில் பார்த்திருப்பீர்கள். மலைகள் சூழ்ந்த ஊர். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஊரில் பல இடங்களில் ஏலக்காய் மனம் வீசும். அன்று மதியம் திடீரென்று மூணாறுக்கு சென்று வரலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது. சென்று வரலாம் என்பதுமாலை மூணாறுக்கு கிளம்பி, இரவு அங்கு ஒரு விடுதியில் தூங்கி, காலை எழுந்து பேருந்தில் போடி வந்து சேர வேண்டும். இது தான் எண்ணம்.

மூணாருக்கு செல்ல பல பாதைகள் இருக்கிறது. ஒன்று உடுமலைபேட்டை வழியாக செல்வது. மற்றொரு பாதை, போடியில் இருந்து போடி மெட்டு, தேவிக்குளம், பூப்பாறை வழியாக செல்வது. இவை இரண்டும் பிரதான பாதைகள். இதுபோக கம்பம் வழியாகவும் செல்லலாம். (இந்த பாதை அன்று தான் எங்களுக்கு தெரிந்தது). சற்று வித்தியாசமான அனுபவம் வேண்டுமென்றால், மலையேறிச் செல்லவும் ஒரு பாதை இருக்கிறது. போடிக்கு அருகே குரங்கணி என்ற ஊர் இருக்கிறது. அங்கிருந்து மலைக்கு மேலே செல்ல ஒரு மலைப் பாதை உள்ளது. மூன்று மணி நேரம் இந்த மலை பாதையில் நடந்தால் சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற இடம் வரும். ஒரு சிறிய குடியிருப்பு. இங்கிருந்து ஒன்றரை மணி நேரம் மேலே நடந்தால் டாப் ஸ்டேஷன் என்ற இடம் வரும். இது இப்பொழுது ஒரு சுற்றுலா தளமாக மாறியுள்ளது. இங்கிருந்து மூணாறு பக்கம் தான். வாகனத்தில் செல்லலாம். மூணாருக்கு தார் சாலை போடும் முன்பு போடியில் இருந்து செல்ல அனைவரும் இந்த மலைப் பாதையை தான் உபயோகப்படுத்தினார்கள் என்று முன்பு ஒரு முறை என்னிடம் கூறப்பட்டது. கூடுதல் தகவல் - மூணாறு பகுதியில் விளையும் தேயிலையை கீழே இறக்கி வர டாடா கம்பெனி இந்த பாதையில் முன்பு விஞ்ச் அமைத்திருந்தது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 

மூன்று மணி அளவில் போடி பேருந்து நிலையத்திற்கு வந்து பார்த்தோம். மாலை ஐந்து மணிக்கு ஒரு பேருந்து இருப்பதாக அங்கிருந்த சுவற்றில் இருந்த அட்டவணை தெரிவித்தது. எதற்கும் இங்குள்ள  டைம் கீப்பரிடம்  (Time keeper) கேட்டுவிட்டு போகலாம் என்று நண்பன் கூறினான். வழக்கம் போல் சோம்பேறித்தனம் தலைதூக்கவே, அதெல்லாம்  சரியா தான் இருக்கும். இப்போ போயிட்டு அஞ்சு மணிக்கு வந்துரலாம் என்று சொல்லி இழுத்து சென்றுவிட்டேன். 

பேருந்தை பிடித்து விடும் எண்ணத்தோடு சரியாக ஐந்து மணிக்கு போடி பேருந்து நிலையத்திற்கு வந்தோம். இபோதாவது டைம் கீப்பரிடம்  (Time keeper) விசாரிக்கலாம் என்று கூறினான். இந்த முறையும் வேண்டாம் என்று கூறினால் திட்டிவிடுவான் என்று உணர்ந்ததால் "சரி வா" என்று கூறி அவரை பார்க்க போனோம். தேடி பார்த்ததில் அப்படி ஒரு நபர் தென்படவே இல்லை. சரி, வேறு யாரவது டிரைவர், கண்டக்டரிடம் கேட்கலாம் என்று பேருந்து நிலையத்தை இரண்டு முறை சுற்றினோம். நான்கு பேரிடம் விபரம் கேட்டோம். நான்கு பேரும் நாலு விதமான தகவல் சொன்னார்கள். இதில் எது உண்மை என்று அறிய ஐந்தாம் நபரை நாடலாம் என்று முடிவு செய்து அங்கே நின்றுக்கொண்டிருந்த ஒரு கண்டக்டரிடம் கேட்டோம். அவர் சொன்ன விபரம் முன்பு சேகரித்த ஒரு தகவலுடன் ஒத்து போனது. அதனால் அதுவே உண்மையான தகவல் என்று முடிவு செய்தோம். 

இதிலிருந்து நாங்கள் புரிந்து கொண்டது என்னவென்றால், போடி மெட்டில் பாதை சீர்குலைந்த காரணத்தால் மூணாறுக்கு வேறு வழியில்தான் செல்ல  வேண்டும். கம்பம் வழியாகவும் செல்லலாம் என்ற கூடுதல் தகவலும் கிடைத்தது. இதற்கு மேல் கேள்வி கேட்டால் அங்குள்ளவர்கள் கடுப்பாகிவிடுவார்கள் என்பதால் அப்படியே தேனி சென்றுவிடலாம், அங்கு எதாவது தகவல் கிடைக்குமா, பார்க்கலாம் என்று முடிவு செய்து, கிளம்ப தயாராக இருந்த தேனி பேருந்துல் ஏறினோம்.

போடியிலிருந்து தேனி சுமார் 20 கி.மீ. அரை மணிநேரத்திற்குள் போய்விடலாம். மதியம் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டதனால் தேனி சென்றதும் வழக்கத்திற்கு மாறாக ஹோட்டலை தேடாமல் மூணாறு பேருந்தை தேடி அலைந்தோம். இங்கும் பல பேரை கேட்டோம், பலவிதமான தகவல்கள் கிடைத்தது. கடைசியில் அங்குள்ள டைம் கீப்பர் சொன்ன தகவல் நம்பத்தகுந்ததாக இருந்தது. மூணாறுக்கு 10 மணிக்கு மேல் தான் தேனியில் இருந்து பேருந்து. எப்படியும் மூணாறை அடைய 2 மணிக்கு மேல் ஆகிவிடும். அது சரிபட்டு வராது என்பது நன்றாக தெரிந்தது. இருந்தாலும் அங்கு செல்லாமல் இருக்கவும் மனதில்லை. சரி, அடுத்த இடம் கம்பம் தான். சும்மா அங்கு போய் தான் பார்ப்போமே. மூணாறு செல்லும் பாதையில் போக முடிந்த அளவுக்கு போவோம் என்று முடிவு செய்து அங்கிருந்து கம்பம் பேருந்தில் ஏறினோம். 

மழை கால இரவானதால் தென்றல் நன்றாக வீச பயணம் இனிதாக இருந்தது. அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்தோம். ப்ளெக்ஸ் (Flex) கலாசாரம் நன்றாக பரவியிருந்தது தெரிந்தது. கல்யாணம், காதுகுத்து, புதுமனை புகுதல், நினைவு நாள் என அனைத்திற்கும் ப்ளெக்ஸ் பார்க்க முடிந்தது. ப்ளெக்ஸ் வைப்பதற்கும் நமது அடிப்படை பண்பாட்டிற்கும் தொடர்பு உண்டு என்று யாரோ கூறியது ஞாபகத்திற்கு வந்தது. கம்பம் போய் சேர சுமார் முக்கால் மணி நேரம் ஆனது. 

History Repeats. இங்கும் அதே தான். தகவல் தேடினோம்... நாலு பேர்... நாலு பதில்...

அங்கே இங்கே விசாரித்ததில் கம்பத்தில் இருந்து மூணாறு செல்ல வழி தெரிந்தது. 
கம்பம் ---> கம்பம் மெட்டு ---> நெடுங்கண்டம் ---> பூப்பாறை --> மூணாறு 

இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. தகவல் எந்த அளவுக்கு முக்கியமானது என்று அன்று தான் எனக்கு விளங்கியது. எதுவுமே எளிதில் கிடைத்தால் அதன் அருமை நமக்குத் தெரியாமல் போய்விடும். இணையம் வந்தவுடம் எந்த தகவலும் நொடி பொழுதில் பெறும் வசதி வந்துவிட்டது. கூகுள் கடவுள் அணைத்து கேள்விகளுக்கும் விடை அளிப்பார். பயணத்தின் பொழுது தகவல் பெற மொபைல் போன் உதவும். வழி காட்ட Maps வசதி உள்ளது. அன்று எங்களால் இந்த வசதி எதையும் பெற முடியாமல் பொய் விட்டது. எனது 1000 ருபாய் நோக்கியா மொபைலில் எதுவும் கிடையாது. என் நண்பனின் மொபைலில் சார்ஜ் மிக கம்மியாக இருந்த காரணத்தால் அதையும் உபயோகபடுத்த முடியாமல் பொய் விட்டது. இதனால் எல்லா தகவலுக்கும் அந்த நாலு பேரையே நம்பி இருந்தோம். அன்று எங்களுக்கு சரியான தகவலின் அருமை புரிந்தது. சரியான முடிவு எடுப்பதற்கு சரியான தகவல்களே அடித்தளம். MBA வில் படித்தது அன்று தான் புரிந்தது. படித்தலுக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி விளங்கியது. 

நெடுங்கண்டம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கேன்.  அது ஒரு  கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட ஊர் என்பது என்னுடைய கணிப்பு. அதனால் நெடுங்கண்டம் சென்றுவிட்டால் மூணாறு எப்படியாவது சென்று விடலாம்  என்று ஒரு நம்பிக்கை இருந்தது. வெறும் குருட்டு நம்பிக்கை தான்.கம்பத்தில் இருந்து நெடுங்கண்டத்திற்கு எதாவது பேருந்து வருமா என்று பார்த்தோம். எதுவும் வரவில்லை. கம்பத்தில் இருந்து நெடுங்கண்டத்திற்கு  ஜீப் ஏதாவது இருக்கலாம் என்று ஒருவர் சொன்னார். ஜீப்  எங்கே நிற்கும் என்று விசாரித்து அங்கே சென்றோம். அங்கே ஒருவர் மட்டும் ஜீப் வைத்து கொண்டிருந்தார். மணி ஒன்பதரையை தாண்டி இருந்தது. 

அவரிடம் பேச்சு கொடுத்தோம். அவர் நெடுகண்டம் போகலாம், ஆனால் குறைந்தது எட்டு, பத்து பேராவது சேர வேண்டும் என்றார். அப்பொழுது நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். அவர் பெயரையும் மொபைல் நம்பரையும் குறித்துக்கொண்டோம். அருகே சென்று விட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு வேறு எதாவது Option இருக்கிறதா என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தோம். சுற்றியதில் அந்த ஜீப் அண்ணனை விட்டால் வேறு வழி இல்லை என்று புரிந்தது. அவருக்கு வேண்டிய பணத்தை கொடுத்து ஜீப்பில் இருவர் மட்டும் செல்வது தான் ஒரே வழி என்று முடிவு செய்தோம். சரி, அவரிடம் பேரம் பேசலாம், எவ்வளவு குறைக்க முடியுதோ அவ்வளவு குறைக்கலாம் என்று பேசி வைத்து அவரை மறுபடியும் அணுகினோம். அவருக்கும் அந்த Deal பிடித்திருக்க வேண்டும். ஒரு ட்ரிப்பில் 800 வரை வரும் என்றும் வேறு ஆட்கள் சேர்ந்தால் எங்களிடம் குறைத்துக் கொள்வதாகவும் கூறினார். அவரிடத்தில் பேசியதில் இருந்து அவர் எங்களிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. அதனால் அவரை நம்பி போகலாம் என்று தோன்றியது. பத்து நிமிட காத்திருப்பில் 5 பேர் சேர்ந்தார்கள். எங்களிடம் 500 ருபாய் கொடுத்தால் போதும் என்றார். சரி என்றதும் பயணம் தொடங்கியது. 

 கம்பம் மெட்டு வரை கொண்டை ஊசி வழி சாலை. அதன் பின் கேரளா. தொடர்ந்து சிறு சிறு ஊர்கள் வந்துக்கொண்டிருந்தது. சுமார் முக்கால் மணி நேர பயணத்தில் நெடுங்கண்டம் அடைந்தோம். மணி பதினொன்றை தாண்டி இருந்தது. நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. பயங்கரமான பசி. அந்த ஜீப் அண்ணன் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு எங்களை ஒரு சின்ன பரோட்டா கடைமுன் இறக்கிவிட்டார். அங்கே ஆளுக்கு இரண்டு பரோட்டா ஆர்டர் செய்து விட்டு அடுத்து எப்படி பயணத்தை தொடர்வது என்று கலந்தாலோசித்தோம்.

போடியில் இருந்து கிளம்பும் முன்பே பூப்பாறை-மூணாறுக்கு இடையே சின்னகனால் என்ற ஊரில் ஒரு விடுதிக்கு சொல்லி வைத்திருந்தோம். அங்கு பேசியதில் பூப்பாறையில் இருந்து ரிசார்ட் 12 கி.மீ. என்று தெரிந்தது. நெடுங்கண்டத்தில் இருந்து பூப்பாறை 35  கி.மீ. ஆக மொத்தம்  47 கி.மீ. இன்னும் பயணம்  செய்ய வேண்டும். இரண்டு வழி தான். இன்னும் 2 மணி நேரம் காத்திருந்தால் தேனியில் இருந்து மூணாறுக்கு புறப்பட்ட பேருந்து அங்கு வந்தடையும். அதில் ஏறி ரிசார்ட் அடைவது. அல்லது அந்த ஜீப் அண்ணனையே மறுபடியும் கூப்பிடுவது. எங்களுக்கு இரண்டாவது ஐடியாவே சரி எனப்பட்டது.

வரும் வழியில் அந்த ஜீப் அண்ணனிடம்  பேசியதில் அவர் கம்பம் - நெடுங்கண்டம் ரெகுலர் ட்ரிப் அடிப்பவர் என்று தெரிந்தது. போடி மெட்டு பாதை பாதிக்கப்பட்டதால், கம்பம் வழியாக மக்கள் அதிகம் செல்வதால், அவர் போன்றவர்களுக்கு வருமானம் அதிகரித்திருப்பதாக சொன்னார். Economics-ல் என்னனமோ படித்தது எல்லாம் ஞாபகம் வந்தது. ஒரு இடம் பாதிப்பு அடைந்தால் மற்றொரு இடம் எப்படி லாபம் அடையும் என்று விளங்கியது. 

அந்த ஜீப் அண்ணன் ஜீப்பை ஓரமாக நிறுத்திவிட்டு ஜீப்பிலேயே படித்திருந்தார். அவரிடம் ரிசார்ட் வரை வருகிறீர்களா என்று கேட்டோம். அவர் வரும் மூடில் இல்லை என்று தெரிந்தது. இருந்தாலும் அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் கேட்டு பார்ப்பதாக சொன்னார். ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தவர், ஒரு ஆட்டோ டிரைவர் 600 ரூபாய்க்கு வர ஒத்துக் கொண்டதாக சொன்னார். இரவு, 47 கி.மீ. மலை பயணம், மழை வேறு பெய்துக்கொண்டிருந்தது. 600 ரூபாய் சரி தான் என்று பட்டது. இதுவே சென்னை என்றால் எக்குத்தப்பாக கேட்டிருப்பார்கள். பேரம் பேசாமல் போகலாம் என்று சொன்னோம். 

உற்ற நேரத்தில் உதவிய அந்த ஜீப் அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறினோம். ஆட்டோவின் இரு பக்கமும் மூடி இருந்தும் ஜில் என்று காற்று உள்ளே வீசியது. இருந்த ஒரே துண்டை எடுத்து தலையை மூடிக்கொண்டேன். இருந்தாலும் நடுங்கியது. அப்படியே இருவரும் பேசிக்கொண்டே பயணித்தோம். சிறிது தூரம் சென்றதும் மழை விட்டு விட்டது. இரு பக்கமும் கும்மிருட்டாய் இருந்தது. போக போக புகை கிளம்புவது போல் தெரிந்தது. சிறிது நேரத்திற்கு  பிறகு தான் அது பனி என்று விளங்கியது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் பனி மூட்டம் பாதை முழுவதையும் மறைத்து விட்டது. ஆட்டோ டிரைவர் மிக கவனமாக தான் சென்றார். முன்னாடி வளைவு இருப்பது வளைவுக்கு மிக அருகில் சென்றதும் தான் தெரிந்தது. கொஞ்சம் திக் திக் என்று தான் இருந்தது. இருந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் பயணித்தேன். ஒரு மணி நேர பயணம் மிக நீண்டதாக தெரிந்தது. பூப்பாறையை தாண்டியதும் கவனமாக பார்த்துக்கொண்டுவந்தோம். விடுதியை தவற  விட்டு  விட கூடாது என்பதற்காக. கடைசியில் ஒரு வழியாக விடுதி வந்தடைந்தோம். 

பத்திரமாக வந்து சேர்த்ததுக்கு ஆட்டோ டிரைவர்க்கு பணத்துடன் நன்றியையும் கூறிவிட்டு விடுதிக்குள் சென்றோம்.

அணைத்து formalities-ம் முடித்து அறைக்கு வந்து படுக்கும் பொழுது மணி ஒன்று. 

படுத்ததும் மனதிற்குள் பல எண்ணங்கள் ஓடின. எவ்வளவோ இடத்தில் திரும்பி ஊருக்கு செல்லும் சூழ்நிலை இருந்த போதிலும் ஏதோ ஒன்று என்னை மூணாறு செல்ல வைத்தது. அப்பொழுது தான் ஒன்று புரிந்தது - "முயற்சி திருவினையாக்கும்" என்று. 

3 comments:

  1. Good writing. It is true that there are Cable car settings in Top station to Central. I would give "Manthil Uruthi Vendum"...

    ReplyDelete
  2. In your second para second line: You have mentioned as Bodi - Bodi Mettu-Devikulam-Poomparai-Munnar..
    But the correct sequence should be: Bodi-Bodi Mettu-Poomparai-Devikulam-Munnar.

    Appreciate your writing interest.
    Had it been planned well in advance, am sure you would had much more better experience and you would had good content to write it..
    Please do not stop this..
    Continue Writing..
    My Wishes..
    Balaji M
    Faculty Member
    TSM

    ReplyDelete
  3. @Balaji Manoharan - Thank you for the comment sir. Will try to write better in the future blogs...

    ReplyDelete